குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை

கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம் சுற்றுவட்டாரத்தில் மழை பதிவாகவில்லை.
மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி
மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி
Published on: 

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரையில் பரவலாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. விட்டு விட்டு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

அருவி

மெயின் அருவியில் ஆர்ச் வளைவை தொடும் அளவிற்கு இன்று காலையில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடியாக மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளான பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ள போதிலும் அங்கு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்து வரும் நிலையில் காலையில் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி

இன்று தென்காசி உட்பட தென் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது குற்றாலம் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராடுவது வழக்கம். குறிப்பாக மெயின் அருவியில் புனித நீராடி குற்றாலநாதர் கோவிலில் வழிபட்டு செல்வர். ஆனால் இன்று காலையில் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது. நேரம் செல்ல செல்ல மாலையில் இருந்து கனமழையாக பொழிய தொடங்கியது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக திருச்செந்தூர் தாலுகாவில் மிக கனமழை பெய்தது. இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில், இன்றும் அதிகாலையில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

திருச்செந்தூர் தாலுகாவை பொறுத்தவரை காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காயல்பட்டினம்

காயல்பட்டினத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 18 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. திருச்செந்தூர் நகர் பகுதியில் 12 சென்டிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 9 சென்டிமீட்டரும் மழை பெய்தது. சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்திலும் இன்று 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்கு 5½ சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரத்திலும் இடைவிடாது சாரல் மழை பெய்து வருகிறது. அங்கு 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தூத்துக்குடி நகர் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சில முக்கிய பகுதிகளில் தெருக்கள் சேறும் சகதியுமாக நடப்பதற்கே முடியாத அளவில் இருக்கிறது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. கீழஅரசடி, மணியாச்சி, ஒட்டப்பிடாரம், வேடநத்தம், சூரன்குடி, வைப்பார், காடல்குடி மற்றும் விளாத்திகுளத்தில் விட்டு விட்டு சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

அதேநேரத்தில் கோவில் பட்டி, கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம் சுற்றுவட்டாரத்தில் மழை பதிவாகவில்லை. வானம் மட்டும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம் ஆகிய 3 தாலுகாவில் எங்குமே மழை பதிவாகவில்லை.

X