

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி மலை, ஆன்மீகமும் இயற்கையும் ஒன்றிணைந்த மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும். புராண வரலாற்றின்படி, அத்திரி மகரிஷி மற்றும் அனுசூயா தேவியின் தவத்திற்கு இணங்க மும்மூர்த்திகளும் குழந்தையாகக் காட்சி தந்த புனித பூமி இதுவாகும். இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலும், மலையின் உச்சியில் இருந்து கொட்டும் பஞ்சலிங்க அருவியும் தமிழகம் முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில், பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்புப் பகுதிகளான மலை கிராமங்களில் இன்று திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக, அருவிக்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது.
நீர்வரத்து பாதுகாப்பான அளவில் இல்லாததாலும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாலும், இன்று 22-ந்தேதி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அருவிப் பகுதி மற்றும் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் கோவில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.