முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on: 
Summary

முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்துக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தினந்தோறும் வெளுத்து வாங்கி வருகிறது.

விடிய விடிய மழை

நேற்று தேனி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் மாலை தொடங்கி இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அருவிகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள்

தொடர் மழை காரணமாக குளுமையான சூழல் நிலவி வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்துக்கு ஜூன் மாதம் முதல் தேதியில் திறக்க வேண்டிய தண்ணீர் இந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ந் தேதி தாமதமாக திறக்கப்பட்டது. இதனால் முதல் போக சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்குமா? என்று விவசாயிகள் கவலையடைந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிடுகிடு உயர்வு

கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 46.52 அடியாக உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று விடிய விடிய பெய்த மழையால் மூல வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 1265 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 86 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1568 மி.கன அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 119.75 அடியாக உள்ளது. நேற்று 2489 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 4271 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 400 கன அடி நீர் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 2583 மி.கன அடியாக உள்ளது.

வெள்ளப்பெருக்கு
வெள்ளப்பெருக்கு

முழு கொள்ளளவை எட்டியது

பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 387 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 29.10 அடி. வரத்து 56 கன அடி. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26.50 அடி. வரத்து 5 கன அடி.

Sothuparai Dam
Sothuparai Dam

மழை அளவு

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 300 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. ஆண்டிபட்டி 29.6, அரண்மனைபுதூர் 10.2, வீரபாண்டி 13.4, பெரியகுளம் 23, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 6, வைகை அணை 23.4, போடி 30, உத்தமபாளையம் 46, கூடலூர் 16.6, பெரியாறு அணை 27, தேக்கடி 76, சண்முகாநதி அைண 15 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

அணை

முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்துக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை காரணமாக சுருளி, மேகமலை, கும்பக்கரை உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com