தொடர் மழை- காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர் மழை- காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
Published on: 
Summary

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரம்

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தமிழக-கர்நாடக மாநிலங்களின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.

6,000 கனஅடியாக உயர்வு

இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு நேற்று வரை வினாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நில வரப்படி வினாடிக்கு 6,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஆற்றில் தண்ணீர் வேகமாகப் பாய்ந்து செல்கிறது.

மேலும், ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பாறைகளின் மீது விழுந்து வெள்ளை நுரையுடன் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளின் அழகைக்காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளின் அழகையும், காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரையும் கண்டு ரசித்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதைப் பார்த்து சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக-கர்நாடக மாநில எல்லைப் பகுதியான பிலி குண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர்

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் வேகமாகச் செல்கிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் இறங்கவோ, ஆபத்தான இடங்களுக்குச் செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X