

கோயம்பேடு, பூ மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, திண்டிவனம், திருவண்ணாமலை, திருத்தணி, ஓசூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. மல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.700 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 2 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
கார்த்திகை தீபம் விழா, அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் காரணமாக தேவை அதிகரித்து உள்ளதால் மல்லிகை பூ விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.
இதேபோல் கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் சாமந்தி பூ விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. ரகத்தை பொறுத்து ஒரு கிலோ சாமந்தி பூ கிலோ ரூ.100 வரை விற்பனை ஆகி வருகிறது.
இதுகுறித்து பூ மொத்த வியாபாரி ஒருவர் கூறும் போது, பரவலாக பெய்யும் மழை மற்றும் பனி பொழிவு காரணமாக மல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதன் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது என்றார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை விபரம் (கிலோவில்) வருமாறு:- சாமந்தி-ரூ.100 வரை, மல்லி-ரூ.2ஆயிரம் வரை, ஐஸ் மல்லி -ரூ.1200, முல்லை-ரூ.750 முதல் ரூ.900 வரை, ஜாதி-ரூ.600 முதல் ரூ.750வரை, கனகாம்பரம்- ரூ.1200வரை, பன்னீர் ரோஜா-ரூ.140வரை, சாக்லேட் ரோஜா-ரூ.240 வரை அரளி-ரூ.300, செவ்வரளி-ரூ.400, சம்பங்கி-ரூ.240.