

போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வடபழனி அழகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்கமுத்து (71). சினிமாவில் மேக்கப் மேனாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதி ஆற்காடு சாலை வழியாக நடந்து சென்றபோது ‘டிப் டாப்’ வாலிபர் ஒருவர் அறிமுகமானார். இந்த நிலையில் நேற்று மாலை வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு சிங்கமுத்து தனது குடும்பத்துடன் சென்றார். அந்த நேரத்தில் பின் தொடர்ந்து வந்த அதே “டிப் டாப்” வாலிபர் சிங்கமுத்துவிடம் பேச்சு கொடுத்தார்.
மேலும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறி அவரை தனியாக வணிக வளாகத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தார். மேலும் “உங்கள் கை விரலில் அணிந்திருக்கும் மோதிரம் மங்கலாக இருக்கிறது” என்று கூறியதால் சிங்கமுத்து தனது 6 கிராம் தங்க மோதிரத்தை கழற்றி அந்த வாலிபரின் கையில் கொடுத்து பார்க்குமாறு தெரிவித்தார்.
இதையடுத்து நகையை வாங்கிய வாலிபர், அதனை பரிசோதிப்பது போல நடித்து திடீரென கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து நகையுடன் தப்பி ஓடி விட்டார். ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து நூதன முறையில் நகை பறித்து சென்ற வாலிபர் குறித்து வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.