

தமிழக தொழில்துறை அமைச்சராக இருந்து வரும் கீர்த்தனாவுக்கு, விருதுநகரில் அவர் படித்த தனியார் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது:-
விருதுநகரில் ஒரு சுழற்சி வந்தால் எப்போதுமே அது இருந்துகொண்டே இருக்கும். அதேபோல் பள்ளியில் படித்து முடித்தவுடன், தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு, அதன் பிறகு கல்யாணம் என்ற இந்த சுழற்சி மட்டும் என்றைக்குமே மாறியது கிடையாது.
இந்த சுழற்சியில் இருந்து நீங்கள் வெளியே வரவேண்டும், அதற்கு நீங்கள் தைரியமாக வீட்டில் சண்டை போட வேண்டும். என்னால் சாதிக்க முடியும் என்று பெற்றோரிடம் தைரியமாக எடுத்துக்கூறினால் மட்டுமே அவர்கள் உங்களை நம்பி வெளியே அனுப்ப தைரியமாக முன்வருவார்கள்.
ஏனென்றால் நானும் அதே சுழற்சியில் சிக்கினேன். நானும் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த உடனேயே கல்யாண பேச்சு வந்தது. என்னை பெண் பார்க்க வந்தார்கள். நான் அவர்களிடமே லண்டன் சென்று படிக்க போகிறேன் என்று சொன்னேன்.
அதற்கு என் வீட்டில் அப்பா தடையா இருந்தார்கள். உன்னை யார் லண்டனில் படிக்க வைக்க போறாங்க என்றார். காரணம் அவர்களுக்கு பயம். ஒரு பெண்மணி இந்த சமூகத்தில் எப்படி வளர முடியும்? நாம் அனைவருமே எந்த ஒரு பின்புலத்தில் இருந்து வரவில்லை.
பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால் அவர்கள் பாதுகாப்பாக சேப்பா இருப்பார்கள் என்ற ஒரு காரணம்தான். ஆனால் நான் அன்று என் தந்தையை சரிக்கட்டினேன். கண்டிப்பாக சமூகத்துல முன்னேறுவேன் என்று அவருக்கு ஒரு தைரியம் கொடுத்தேன்.
அப்படி தைரியம் கொடுத்ததால் தான், அதே அப்பா நான் அரசியலுக்கு வரப்போறேன் சொன்னபோது அவரே எனக்காக போஸ்டர் ஒட்டினார். நான் படித்து முடித்தபோது தடையாக இருந்தவர்தான் என்னோட முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தார்.
அந்த தைரியத்தை கொடுக்க வேண்டியது நாம்தான். ஏன் என்றால் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் மீது எப்போதுமே ஒரு பயம் இருக்கும். ஒரு பெண் வெளிசமூகத்துக்கு போனால் பல்வேறு பிரச்சனைகள் வரும் என்பதால்தான். அப்போது அவர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து வெளியில் சென்று தன்னால் சாதிக்க முடியும் என்று நீங்கள் நிரூபித்து காண்பித்தால் மட்டுமே இந்த சுழற்சியில இருந்து வெளிவர முடியும்.
இங்கு இருக்கும் அத்தனை பெண்களுக்கும் சொல்கிறேன். நீங்கள் இந்த சுழற்சியில் இருந்து வெளியே வரவேண்டும், அப்போது என்னை மாதிரி ஒரு அமைச்சராக மட்டுமில்லாமல், பிரதம அமைச்சராக கூட நம்முடைய பள்ளியில் இருந்து ஆக முடியும்.
எனக்கும் பல தடைகள் வந்தன. தனியார் கல்லூரியில் இளங்கலை படித்துமுடித்த பின்னர் முதுகலை படிக்க மிகவும் ஆசை. அதன்றாக வீட்டுக்கே தெரியாமல் நுழைவுத்தேர்வு எழுதி தேர்வானேன். மீண்டும் வீட்டில் கூறியபோது மறுபடியும் அதே தடை.
பின்னர், நான் படிக்க கல்வி உதவித் தொகை இருக்கிறது, நீங்கள் எதுவும் கட்ட தேவையில்லை என்று கூறியதும் படிக்க சம்மதித்தனர். பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரி சென்றோம்.
அங்கு நான் மட்டும்தான் இந்த தமிழ்நாட்டில இருந்து வந்த ஒரே பெண்மணி. அது ஒரு மத்திய பல்கலைக் கழகம். உலக நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்தார்கள். முதலில் எனக்கு மிகவும் பயமாக இருந்தது.
இங்கே நாம் எப்படி இருக்கப்போகிறோம் என்ற பதட்டமும் இருந்தது. ஆங்கில புலமையும் பெரிதாக கிடையாது. நமக்கு தெரிந்தது தமிழ் மட்டும்தான். ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துகொண்டே இருந்தது.
ஆனாலும் பெற்றோரின் நம்பிக்கைக்கு ஒரு பாத்திரமாக இருக்கவேண்டும் என்று எண்ணி படிப்பை தொடர்ந்தேன்.
நம்முடைய தனித்திறமையை வளர்த்துக்கொள்ள விரும்பி, நடனம் கற்றுக்கொண்டேன். மேலும் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தான் நம் மக்களுக்கு நிறைய செய்யவேண்டும் என்பதற்காக தற்போது நான் இப்படி வந்திருக்கிறேன்.
படித்து முடித்ததும் வளாக தேர்வில் ஒரு டேட்டா அனலிஸ்ட், சோசியல் சர்வீஸ் டேட்டா அனலிஸ்ட், ஆக மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் பணியில் சேர்ந்தேன்.
என்னுடைய முதல் மாத சம்பளம் ரூ.9,600. அப்போது அங்கு மக்களுடன் சேர்ந்து சேரி பகுதியிலும் பணியை தொடர்ந்தேன். அதேபோல் அரசு பள்ளிகளின் முன்னேற்றத்கான பல பணிகள் மேற்கொண்டேன்.
அப்போதுதான் எனக்கு இந்த அரசியல் ஆர்வம் வந்தது. பின்னர் அரசியல் ஆலோசகராக சென்றேன். மூன்று முதலமைச்சர்களிடம் வேலை பார்த்துள்ளேன். நமது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நம்முடைய ம்தா பானர்ஜி ஆகியோரிடம் வேலை பார்த்தபோதுதான் ஒரு தைரியம் வந்தது.
நாமும் இந்த அரசியலில் வந்து சாதிக்க முடியும் என்ற எண்ணம் வந்தது. ஏனென்றால் சமூக சேவை செய்யவேண்டும் என்ற உண்மையாக எண்ணம் என்னிடம் உள்ளது.
அந்த ஒரே காரணத்துக்காக நான் அரசியலில் வந்து கால் பதித்தேன். அதற்கு முதலமைச்சர் விஜய் அண்ணன் வாய்ப்பு கொடுத்தார். சமூக நலன் என்று வந்துவிட்டால் பல போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் மீறிதான் நீங்க வந்து ஜெயிக்க வேண்டும். ஒரு பெண்மணியாக இருப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.
ஆனால் ஜெயித்துவிட்டோம் என்றால் அடுத்ததாக அந்த பெண்மணி எப்படி முன்னேறுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு பெண் முன்னேறினால் மற்றொரு பெண்ணை முன்னேற்ற முடியும். அந்த வழியை நீங்கள் அனைவரும் பின்பற்றி, நான் அடுத்து வரும்போது உங்களை ஒரு அரசியல்வாதியாக பார்க்க வேண்டும். நிறைய பிரதம மந்திரிகள் இங்கு இருந்து செல்லவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.