கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் அடித்துக் கொலை: மனைவியும், கள்ளக்காதலனும் கைது!

நண்பரின் தோட்டத்தில் அளவெடுக்கச் சென்ற அப்துல் ரகுமானை இந்திரகுமார் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்தார்
 Illicit affair
Published on: 
Summary

கடையநல்லூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, இரும்புக்கம்பி மற்றும் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தோட்டத்தில் பிணமாகக் கிடந்த நபர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த பண்பொழி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி, ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த இலத்தூர் போலீஸார், உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும், கொலையாளி குறித்தும் தீவிர விசாரணையில் இறங்கினர்.

26 சிசிடிவி கேமராக்கள்

இந்தக் கொலை வழக்கிற்காகத் துணை சூப்பிரண்டு அதியமான் தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பண்பொழி-தென்காசி சாலையில் உள்ள 26 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு முறை வந்து சென்ற ஒரு காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, அது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வாடகை கார் என்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்டவர் யார்?

போலீசாரின் அடுத்தகட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோலிங் ஷட்டர் தயாரிக்கும் வேலை பார்த்து வந்த அப்துல் ரகுமான் (50) என்பதும், அவரை வாடகை காரில் அழைத்துச் சென்று கொலை செய்தது தென்காசி தைக்கா தெருவைச் சேர்ந்த இசை இந்திரகுமார் (36) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக இசை இந்திரகுமாரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் பின்னணி வெளிவந்தது.

திடீர் திருப்பம் - கள்ளக்காதல் விவகாரம்

கொலை செய்யப்பட்ட அப்துல் ரகுமானுக்கு அம்சா நிஷா (43) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இசை இந்திரகுமார் வேலை பார்த்து வந்த ஹோட்டலுக்கு அப்துல் ரகுமான் குடும்பத்துடன் அடிக்கடி சாப்பிடச் சென்றுள்ளார்.

அப்போது இசை இந்திரகுமாருக்கும், அப்துல் ரகுமானின் மனைவி அம்சா நிஷாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக அப்துல் ரகுமான் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், தங்களது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, அவரைத் தீர்த்துக்கட்ட இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

திட்டமிட்டு அரங்கேறிய கொலை

கடந்த 10-ஆம் தேதி, பண்பொழியில் உள்ள தனது நண்பரின் தோட்டத்தில் ரோலிங் ஷட்டர் அமைக்க அளவெடுக்க வேண்டும் என்று கூறி அப்துல் ரகுமானை இசை இந்திரகுமார் வாடகை காரில் அழைத்துச் சென்றுள்ளார். காரோட்டி அவர்களை இறக்கிவிட்டுச் சென்றதும், தோட்டத்தில் அளவெடுத்துக் கொண்டிருந்த அப்துல் ரகுமானின் தலையில் இரும்புக் கம்பியால் இசை இந்திரகுமார் பலமாகத் தாக்கியுள்ளார்.

அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததும், கல்லைத் தூக்கிப் போட்டு சம்பவ இடத்திலேயே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் தப்பியோடியுள்ளார்.

கள்ளக்காதலர்கள் சிறையிலடைப்பு

இந்தக் கொலை வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட போலீஸார், கொலையாளி இசை இந்திரகுமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவி அம்சா நிஷா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இசை இந்திரகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், அம்சா நிஷா கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com