நெல்லையில் பயங்கரம்: போராட்டத்தின்போது கல்வீச்சு தாக்குதல் - ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!

தாக்குதல் நடத்திய நபர் தலைமறைவாக இருப்பதாக நெல்லை எஸ்.பி.தகவல்.
நெல்லையில் பயங்கரம் - போராட்டத்தின்போது கல்வீச்சு தாக்குதல் - ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!
Published on

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட கல் தலையில் பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் (54) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கண்ணநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை என அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்த ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் சென்றுள்ளார்.

அப்போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் செங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மகாராஜன் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார்.

அப்போது பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வள்ளியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் நெல்லை எஸ்.பி. விஷ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com