

சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை பலகையில் இந்தியில் எழுதப்பட்டிருந்த விவகாரத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழிகாட்டி பலகை நிறுவப்பட்டது.
அந்த பலகையில், திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, துாத்துக்குடி, திருச்செந்துார் ஆகிய ஊர்களுக்கு செல்வது தொடர்பான வழிகாட்டப்பட்டு, தொலைவு விபரமும் எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை அறிவிப்பு பலகைகளில், ஊர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த பலகையில் ஊர்களின் பெயர்களை இந்தியிலும் பெரிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை பலகையில் இந்தியில் எழுதப்பட்டிருந்த விவகாரத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் இருமொழிக்கொள்கைக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.