

திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைல் கல்லில் தமிழ், ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழும் தொடர்பு மொழியாக ஆங்கிலமும் என இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எந்த காலத்திலும் மும்மொழி கொள்கை தமிழகத்தில் பின்பற்றப்படாது என பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் உறுதியாக கடைபிடித்து வருகின்றன.
தமிழகத்தில் முதன்முறையாக ஆட்சியை பிடித்துள்ள தமிழக வெற்றிக்கழகமும், இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்ட மருந்து சீட்டில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி எழுத்துக்களும் இடம் பெற்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நெல்லை அருகே சுங்கச்சாவடி அறிவிப்பு பலகையில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைல் கல்லில் தமிழ், ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. இதேபோல் அந்த மைல் கல்லுக்கு எதிர்முனையில் சென்னை என்ற ெசால்லும், தமிழ், ஆங்கிலம், இந்தி எழுத்துக்களுடன் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக மைல் கல்லில் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் மாநிலங்களில் கேரளா, ஆந்திரா போன்றவற்றில் அம்மாநில மொழியும், ஆங்கிலமும் மட்டுமே எழுதப்பட்டு வருகிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள், ஆன்மீக பயணிகள் செல்லும்போது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுேம இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைல் கல்லில் மாநில மொழி மற்றும் ஆங்கிலம் மட்டுமே எழுதப்படும் நிலையில் தமிழகத்தில் மீண்டும் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.