

கடலூர் மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடும் பனிப்பொழிவு காரணமாக காலை நேரத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். சாலைகள் பனி போர்வையால் மூடப்பட்டு, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால், நடப்பாண்டில் நவம்பர் மாதத்தின் இடையிலேயே பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வந்தது. அதன்பிறகு மழை குறைந்து விட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை 6 மணிக்கு பிறகு காலநிலை அப்படியே மாறி குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
குறிப்பாக மாலை 6 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு மறுநாள் அதிகாலை 6 மணி வரை நீடிக்கிறது. சில நேரங்களில் 8 மணி வரையும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இந்த பனிப்பொழிவு காரணமாக மாவட்டத்தில் கடும் குளிரும் நிலவுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் ஸ்வெட்டர் மற்றும் குல்லாக்களை வாங்கி அணிந்து வருகின்றனர்.
இதையொட்டி, சாலையோர தற்காலிக கடைகளிலும் விதவிதமான கம்பளி ஆடைகள் மற்றும் குல்லாக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு வழக்கத்தை விட மிக அதிகளவில் காணப்பட்டது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் பனி போர்வையால் மூடப்பட்டது போன்று காட்சியளித்தது.
இந்த அடர் பனிப்பொழிவு காலை 7 மணி வரை நீடித்ததால், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் காலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வாகையூர், அரங்கூர், ராமநத்தம், தொழுதூர், ஆவட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு நிலவியது.
மேலும், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
இதேபோன்று விருத்தாசலம், நெய்வேலி, பெண்ணாடம், சிதம்பரம், கிள்ளை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் என மாவட்டம் முழுவதும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
திடீரென அதிகரித்த இந்த அடர் பனிப்பொழிவால் காலை நேரத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.