

போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அடுக்கம், தாமரைக்குளம், பாலமலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தீவுகளாக மாறியது. இப்பகுதியில் மின்தடையும் ஏற்பட்டதால் இருளில் மூழ்கி இரவு முழுவதும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை 6 மணி வரை 7 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல் - அடுக்கம் - பெரியகுளம் மலைச்சாலையில் மண் சரிவாலும், பாறைகள் உருண்டு விழுந்ததாலும் இன்று 3வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சேதமடைந்த பகுதிகளை பொக்லைன் எந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் சீரமைக்கும் பணி நடைபெற்றது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அடுக்கம், தாமரைக்குளம், பாலமலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தீவுகளாக மாறியது. இப்பகுதியில் மின்தடையும் ஏற்பட்டதால் இருளில் மூழ்கி இரவு முழுவதும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
இன்று காலை மஞ்சள்பரப்பு, புல்லாவெளி இடையே மலைச்சாலையின் குறுக்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. தடியன்குடிசை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி பகுதியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் இன்று காலை 5 இடங்களில் பாறைகள் உருண்டும், மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரத் மற்றும் சாலைப்பணியாளர்கள் விரைந்து சென்று கொட்டும் மழையிலும் பொதுமக்கள் உதவியுடன் அறுவை எந்திரங்கள் மூலம் மரத்தை அகற்றும் பணியிலும், பாறைகளை அப்புறப்ப டுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். பல இடங்களில் மின் வயர்கள் அறுந்து தொங்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மன்னவனூர், பூம்பாறை உள்பட 13 இடங்களில் கனமழையால் வீடுகள் இடிந்து சேதமாகின. அப்பகுதிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இன்று காலை, பழனி - கொடைக்கானல் மலைப் பாதையில் உள்ள பி.எல். செட் அருகே மண்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து பெயர்ந்து விழுந்த பெரிய அளவிலான பாறாங்கற்களும் மண்ணும் தார்ச்சாலையை முழுமையாக ஆக்கிரமித்தன.
இதேபோல், சவரிக்காடு அருகே உள்ள சாலையிலும் பலத்த மழையால் மரங்கள் மற்றும் ராட்சத மரக்கிளைகள் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டது. சம்பவத்தின் போது வாகனங்கள் எதுவும் அப்பகுதியில் செல்லாததால் பெரும் விபத்துக்களும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லவிருந்த வாகனங்களை உடனடியாக ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். சாலையில் விழுந்துள்ள பாறைகள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டுப் பாதை முழுமையாகப் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைச்சாலையில் இன்று மட்டும் 10 இடங்களில் மண் சரிவு, மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மலைகிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சாலை வசதி இல்லாமலும் தொலை தொடர்பு இல்லாமலும் தீவுகளாக காட்சி அளிக்கின்றன.
திண்டுக்கல் அருகில் உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த அங்கமுத்து மனைவி சித்ரா (42), மில் தொழிலாளியான இவர் நேற்று மழை பெய்தபோது அருகில் இருந்த மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மாபட்டியில் மழைநீர் வடிகாலுக்கு வெட்டிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதை கவனிக்காமல் அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி (45) என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். கள்ளிமந்தயம் அருகே அம்மாபட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திரிஜி என்பவர் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். ஜெயராமன் என்பவரது தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் அன்கேஸ் (6) என்ற 1-ம் வகுப்பு மாணவன் தடுமாறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதன்மூலம் மாவட்டத்தில் கனமழையால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையில் மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்தனர். இதனால் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று உக்கடம், காந்திபுரம், ராமநாதபுரம், குனியமுத்தூர், கவுண்டம்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி, சிங்காநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தொடர் மழையால் கோவையில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. கோவை செல்வபுரத்தில் செல்வ சிந்தாமணி குளம் உள்ளது.
நொய்யல் ஆற்று வெள்ளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை வெள்ளம் இந்த குளத்துக்கு வந்து கொண்டே இருந்தது. இதனால் குளத்தின் நீர்மட்டம் கிடு,கிடுவென உயர்ந்தது. இரவில் குளம் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் குளத்தில் இருந்து பெருக்கெடுத்து வெளியேறியது.
மழை வெள்ளம் ரோட்டை கடந்து எதிர் திசையில் உள்ள அசோக் நகர், பிரபு நகர், சாவித்திரி நகர், செட்டி வீதி, உக்கடம்-செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்தது. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வீடுகளுக்கு ள்ளும் புகுந்தது. இதனால் வீட்டுக்குள் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்ததால் வீடுகளில் தங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இரவு விடிய, விடிய தூங்காமல் அந்த பகுதி மக்கள் தவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் உஷார்படுத்தப்பட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். வீடுகளுக்குள் புகுந்து இருந்த தண்ணீரை அதிக சக்தி கொண்ட மின் மோட்டார்கள் மற்றும் லாரிகள் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது. மேலும் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் சமையல் செய்ய முடியாமல் தவித்த குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்கள், தேநீர் வழங்கி உதவிகள் வழங்கப்பட்டது.
செல்வபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் பல காணாமல் போனதால் அங்குள்ள தண்ணீர் செல்வபுரம் சிந்தாமணி குளத்திற்கு அதிக அளவில் வந்ததாக கூறப்படுகிறது. வீடுகளை சூழ்ந்த வெள்ளம் அங்குள்ள திருமண மண்டபங்களையும் சூழ்ந்ததால் பொதுமக்களை அங்கு தங்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று மாலைக்குள் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளநீர் வெளியேற்றப்படும் என்று அதிகாரிகள் கூறினர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. அந்த நீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.