

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுளள கேரள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளல் லேசான முதல் கனமழை பெய்தது.
குறிப்பாக நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளான அரண்மனை, சூரங்கோட்டை, பேராவூர், பழங்குளம், தேவிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ராமநாதபுரம் நகர் பகுதிகளான கேணிக்கரை, காட்டு பிள்ளையார் கோவில் தெரு, சூரங்கோட்டை, அரண்மனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது.
அதே போல் பாரதி நகர் பகுதியில் உள்ள மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி குளம் போல் காணப்படுவதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தகவல் அறிந்து ராமநாதபுரம் வட்டாட்சியர் பழனி குமார் தலைமையிலான அதிகாரிகள் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் நகரில் நேற்று இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. குறிப்பாக பஜார் பகுதியில் பெய்த மழை காரணமாக நேற்று தீபாவளி விற்பனை மந்தமாக இருந்தது. மழை பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. தீபாவளி நாளை கொண்டாட உள்ள நிலையில் ராமநாதபுரத்தில் பெய்த மழை காரணமாக சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.