

பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றதால், பள்ளம் இருப்பது தெரியாமல் அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அடுத்தடுத்து கீழே விழுந்து காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக நகரின் பிரதான சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
குறிப்பாக, பவானி நகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாததால், மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வீதிகளில் முழங்கால் அளவிற்குத் தேங்கி நின்றது.
மேலும், 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் கழிவுநீர் கால்வாய்களைத் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், மழைக்காலங்களில் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகாத வண்ணம் நிரந்தர வடிகால் வசதி அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து மேட்டூர் செல்லும் பிரதான சாலையில், பவானி பழைய பேருந்து நிலையம் அருகே பழனியாண்டவர் கோவில் முன்பாக உள்ள வேகத்தடை பகுதியில் பெய்த கனமழை காரணமாக திடீரெனப் பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றதால், பள்ளம் இருப்பது தெரியாமல் அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அடுத்தடுத்து கீழே விழுந்து காயமடைந்தனர்.
மழை
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானி போக்குவரத்து காவல்துறையினர், பெரும் விபத்துகளைத் தவிர்க்கும் விதமாகத் தற்காலிக நடவடிக்கையாக அந்தப் பள்ளத்தில் மண் கொட்டிச் சாலையைச் சமன் செய்தனர். தற்காலிகமாக மண் கொட்டி மூடப்பட்டுள்ள இந்தப் பள்ளத்தை, நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாகச் சீரமைத்தனர். தார் சாலை அமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை போல் ஆப்பக்கூடல் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது பெருந்தலையூர் குட்டிபாளையம் செரையாம்பாளையம் வைரமங்கலம் தளவாய்பேட்டை புதுச்சேரி விஜய காலனி பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.
சென்னிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று அதிகாலை மதியம் மாலை வேளையில் தொடர்ந்து மழை பெய்தது.