கனமழை எச்சரிக்கை: சென்னையில் தயார் நிலையில் மீட்பு படை- வேளச்சேரிக்கு படகுகள் வருகை

வடபழனி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, வளசரவாக்கம், மதுரவாயல், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
கனமழை எச்சரிக்கை: சென்னையில் தயார் நிலையில் மீட்பு படை- வேளச்சேரிக்கு படகுகள் வருகை
Published on: 
Summary

சென்னையில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மீட்பு குழுவினர் படகுகள் மற்றும் உபகரணங்களுடன் செயல்படுகின்றனர். 980 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 150 மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த 6 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு வாரம் ஆகிறது. தொடக்கத்தில் இருந்தே பரவலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் மழை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவிய சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சாலைகளில் வெள்ளம்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை 7 மணியிலிருந்து மழை பெய்யத் தொடங்கியது. இரவு முழுவதும் கனமழை விட்டு விட்டு பெய்தது. காதை பிளக்கும் வகையில் பயங்கர இடி சத்தத்துடன் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று விடுமுறை தினமாக இருந்தாலும் கூட பலத்த மழையில் வாகன ஓட்டிகள் சிக்கி பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

வடபழனி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, வளசரவாக்கம், மதுரவாயல், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

சென்னையின் வர்த்தக பகுதியான தி.நகரில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. விடிய விடிய பெய்த மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

11 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தினார்கள். மழை நீர் தேங்கிய பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டன.

தயார் நிலையில் 980 தீயணைப்பு வீரர்கள்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மொத்தம் 980 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 845 தீயணைப்பு வீரர்களும், வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக வரவழைக்கப்பட்ட 135 தீயணைப்பு வீரர்களும் இதில் அடங்குவர். இவர்கள் மாநகரின் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்ட 15 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

படகு

வேளச்சேரிக்கு படகுகள் வருகை

வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் வகையில் ரப்பர் படகுகள், பைபர் படகுகள், மிதவைகள், உயிர் காக்கும் கவசங்கள் (லைப் ஜாக்கெட்டுகள்) மற்றும் மரம் அறுக்கும் எந்திரங்களுடன் மீட்புக் குழுவினர் வேளச்சேரிக்கு வந்துள்ளனர்.

அங்குள்ள ஏ.ஜி.எஸ். காலனி, ராம் நகர் போன்ற தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் முழங்கால் அளவு அல்லது அதற்கு மேல் மழைநீர் தேங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கையாகவும் மீட்புப் பணிகளுக்காகவும் இந்த படகுகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. வேளச்சேரி தவிர்த்து பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளிலும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மீட்பு பணிக்காக 150-க்கும் மேற்பட்ட மீனவர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் தென் மேற்கு அரபிக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் ஒரு சாதாரண குறைந்த காற்றழுத்த பகுதியாக வலுவிழுந்து உள்ளது.

இது மேற்கு வட மேற்கு திசையிலும் நாளை மேற்கு தென்மேற்கு திசையில் சோமாலியா கடற்கரையை நோக்கியும் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் தென்மேற்கு அரபிக்கடல் பகுதி சோ கோத்ரா தீவுகள் மற்றும் சோமாலியா கடற்கரைப் பகுதிகளில் நாளை 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்.

இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

வளிமண்டல சுழற்சி

தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து மற்றும் மியான்மர் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி இன்று காலை நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது. இது இன்று வடக்கு அந்தமான் கடற்பகுதிக்கு நகர்ந்து வரக் கூடும். அதன் பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் தாக்கத்தால் 23-ந்தேதி தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் வி.ஆர். துரை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

மிக கனமழை

இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை 22-ந்தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் ஓர் இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் , மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் 23-ந்தேதி உருவாகின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நல்ல மழை பொழிவை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று உருவாக்கக்கூடிய தாழ்வு பகுதி மூலம் அதிக மழைக்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com