

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (ஞாயிறு) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை, தமிழ்நாட்டில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக அதிக இடங்களில் மழை பொழிகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்தது.
சென்னையில் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருந்தது.
மேகவெடிப்பின் காரணமாக சில பகுதிகளில் கனமழையும் கொட்டித்தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய 'எக்ஸ்' தள பக்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அதை மேக வெடிப்பினால் ஏற்படும் மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
அந்த வகையில் நேற்று வடசென்னைக்கு உட்பட்ட கார்கில் நகரில் 10.9 செ.மீட்டரும், மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மெப்பேடு பகுதியில் 10 செ.மீ. மழையும் கொட்டியது.
இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் மழைநீர் ஆறுபோல ஓடியது. சில தெருக்களில், தாழ்வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது.
இதற்கிடையே இனி வரும் நாட்களிலும் பருவமழை தீவிரம் அடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதன்படி, வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் மற்றும் முதல் சுற்று மழை வருகிற 25-ந் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் நீடிக்கும் காற்று சுழற்சியால் நாளை (திங்கட்கிழமை) வரை பகலில் வெயில் அடித்தாலும் மாலை, இரவு, நள்ளிரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பதிவாகும் என்றும்,
அந்த காற்று சுழற்சி 20-ந்தேதி தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியில் மையம் கொண்டு, வலுவான காற்று சுழற்சியாகவோ, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ வலுபெற வாய்ப்பு இருக்கிறது என்றும்,
அதன் காரணமாக வருகிற 21, 22 மற்றும் 23-ந்தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மழையை தீவிரப்படுத்தும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
இதில் 21, 22-ந் தேதிகளில் வடகடலோரம் டெல்டாவில் கன முதல் மிக கனமழை வரை கொட்டக்கூடும் எனவும், இந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கான சூழல் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
பின்னர் இந்த நிகழ்வு, 23-ந் தேதி தமிழ்நாட்டின் வழியாக நகர்ந்து கேரளாவையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் வருகிற 25-ந் தேதி வரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று தீவிரம் அடைந்து காணப்படும் என்றே சொல்லப்படுகிறது.
சென்னையில் நேற்றிரவு 7 மணி முதல் 10.30 மணி வரையிலான 3 மணி நேரத்தில் பாரிமுனையில் 26.83 செ.மீட்டரும், திருவொற்றியூர் மண்டலத்துக்குட்பட்ட கத்திவாக்கம் பகுதியில் 26.4 செ.மீட்டரும், சாத்தாங்காடு பகுதியில் 22.2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
திருவொற்றியூர், கார்கில் நகர், எண்ணூர், தண்டையார்ப்பேட்டை போன்ற வடசென்னை பகுதியில் அதிக மழை பெய்துள்ளது.