

அரிச்சல்முனை, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கும் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் காரணமாக அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டுகிறது.
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை முதல் தற்போது வரை விட்டு விட்டு லேசான முதல் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் அதிகன மழை பெய்தது.
ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலைகள், தாழ்வான மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதையடுத்து ஊராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் மழை நீரை மோட்டார்கள் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கடுமையான வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த தொடர் மழை மகிழ்ச்சியை அளித்தபோதிலும், வேலைக்கும், வெளியிலும் செல்ல முடியாத அளவுக்கு இயல்பு வாழ்க்கையை முடக்கி வைத்துள்ளது. குறிப்பாக மீன்பிடி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லாததால் பல ஆயிரம் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
அதேபோல் சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. மேலும் அரிச்சல்முனை, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கும் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளனர்.
இந்த தொடர் மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்-35, மண்டபம்-96, ராமேசுவரம்-114.60, பாம்பன்-113.60, தங்கச்சிமடம்-119, திருவாடானை-72, தொண்டி-98.60, வட்டாணம்-38.40, ஆர்.எஸ்.மங்கலம்-108, பரமக்குடி-92, கடலாடி-32, வாலிநோக்கம்-25.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1011.40 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது.