கோவை மாவட்டத்தில் விடிய-விடிய மழை: மின்தடையால் பொதுமக்கள் தவிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காட்சி.
Published on: 
Summary

கோவை மாவட்டத்தில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மின்தடையால் இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மலைப்பகுதிகளில் மழை நீர்வரத்து அதிகரித்து, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. எனினும் கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்து இருந்தது.

பலத்த மழை

இந்நிலையில் நேற்று கோவை மாநகரில் பகலில் வானம் மப்பும் மந்தாரமாகவும், மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. இரவு திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்து. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதியடைந்தனர்.

79 மில்லி மீட்டர் மழை

கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பில்லூர் அணை பகுதியில் 79 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வடவள்ளி, ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, கணபதி, சித்தாபுதூர், காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, அன்னூர், நீலாம்பூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

வீடுகளுக்குள் தண்ணீர்

ஆவாரம்பாளையம் கொரத்தோட்டம், கணபதி பி அண்ட் டி காலனி பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் மோட்டார் உதவியுடன் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அகற்றினர்.

அதேபோல் கோவை மாநகரில் கிக்கானி மேம்பாலம், லங்கா கார்னர், அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதிகளில் தேங்கிய மழைநீரை ஊழியர்கள் மின் மோட்டார்கள் மூலமாக அப்புறப்படுத்தினர்.

மின்தடை

மேலும் கோவை மாநகர பகுதிகளில் பெய்த மழையால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவதியடைந்தனர்.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பில்லூர் அணை 79, பி.என்.பாளையம் 47, டி.என்.ஏ.யூ.39.80, மேட்டுப்பாளையம் 3, அன்னூர் 10, கோவை தெற்கு தாலுகா 18, சிறுவாணி பகுதி 53, சின்னக்கல்லாறு 17, சோலையாறு 5, வால்பாறை 4, கிணத்துக்கடவு 3.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கோவை குற்றாலம் அருவியில் குளிக்க இன்று சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

நீலகிரி

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மழை பெய்கிறது.

ஊட்டியில் நேற்று காலை 11 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் கனமழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் ஊட்டி நகரின் மைய பகுதியில் செல்லும் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மத்திய பஸ் நிலையம் அருகே ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நின்றது. ஊட்டி ரெயில்வே போலீஸ் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது.

குளிர்

மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். கடந்த ஒரு வாரமாக நீர் பனிப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக ஊட்டியில் குளிர் நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று பகல் நேரத்திலேயே மழை பெய்ததால் குளிர் அதிகமாக இருந்தது.

அவதி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் மழையால் அவதிப்பட்டனர். இந்தநிலையில் ஊட்டியில் இன்றும் (வியாழக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X