

சென்னையில் இன்று காலையில் திடீர் கனமழை பெய்தது. 20 நிமிடங்களுக்கு மேல் மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாளை தீபாவளியன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அர்னாப் புயல் மற்றும் முரசு புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரமாக பரவலாக கனமழை பெய்தது. அதன்பிறகு ஓரிரு நாட்கள் மழை சற்று ஓய்ந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் ஓரிரு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் சில இடங்களில் நேற்று காலையிலும், சில இடங்களில் நேற்று மதியமும் கனமழை கொட்டியது.
இந்த நிலையில் சென்னையில் இன்று காலையில் மீண்டும் கனமழை கொட்டியது. சென்னை கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, சேத்துப்பட்டு, எழும்பூர், தேனாம்பேட்டை, தி.நகர், கோயம்பேடு, மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையில் ‘திடீர்’ மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் நாளை தீபாவளியன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தில் வருகிற 12-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வருகிற 12-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (8-ந்தேதி) மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி, சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வருகிற 9-ந்தேதி மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 10, 11-ந்தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.