கும்மிடிப்பூண்டியில் மீண்டும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தபோது கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரிந்தது.
கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை படத்தில் காணலாம்
கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை படத்தில் காணலாம்
Published on: 
Summary

கும்மிடிப்பூண்டி பகுதியை குறிவைத்து அடுத்தடுத்து ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடும் கும்பலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கும்மிடிப்பூண்டி பை பாஸ் சாலையில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இப்பகுதியில் நேற்று நள்ளிரவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஏ.டி.எம்.மையத்தில் இருந்து மர்ம நபர்கள் கடப்பாரையுடன் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் ஒருவனை போலீசார் விரட்டி சென்ற போது கடப்பாைரயை சாலையோரம் வீசி விட்டு தப்பி சென்றான்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தபோது கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரிந்தது.

பணம்

ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை மர்ம நபர்கள் கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்து உள்ளனர். சரியான நேரத்தில் போலீசார் ரோந்து வந்ததால் கொள்ளையர்கள் தங்களது திட்டத்தை கைவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதனால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த பல லட்சம் பணம் தப்பியது.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி நள்ளிரவில் தற்போது கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தின் எதிரே உள்ள மற்றொரு 2 தனியார் ஏ.டி.எம்.களை மர்ம ஆசாமிகள் கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

இதில் ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை மர்மநபர்கள் கியாஸ் கட்டர் மூலம் அறுத்து உடைத்து ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து தப்பினர். கொள்ளையர்கள் பயன்படுத்திய கன்டெய்னர் லாரியை மட்டும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளை

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி படப்பை அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளைபோனது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட அதே வடமாநில கும்பல்தான் கும்மிடிப்பூண்டி ஏ.டி.எம். கொள்ளையிலும் ஈடுபட்டார்கள் என்பது உறுதியானது.

கும்மிடிப்பூண்டி பகுதியை குறிவைத்து அடுத்தடுத்து ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடும் கும்பலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. போலீசார் இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்தி கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

X