அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளான அரிசியின் விலையும கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை கூடியுள்ளது.
அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு
Published on
Summary

அரிசி விலை உயர்க்குவுக் முக்கிய காரணம் நெல் வரத்து குறைந்தது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு அதிக அளவில் அரிசி வருகிறது.

தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் 20 சதவீதம் வரை சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளன.

கடந்த மாதம்

கடந்த மாதம் கிலோ ரூ.220-க்கு விற்கப்பட்ட மிளகாய் வற்றல் தற்போது 270 முதல் 300 ரூபாய்க்கு மேல் வரை விற்கப்படுகிறது. தனியா விலை ரூ.150-ல் இருந்து ரூ.220 ஆக உயர்ந்துள்ளது.

பூண்டு விலை

பூண்டு கிலோ 150-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.280 முதல் ரூ.300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இரண்டு மடங்கு பூண்டு விலை கூடியிருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எண்ணெய்

அதேபோல சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்திருப்பது கவலை அளித்துள்ளது. சூரிய காந்தி ரீ பைண்டு சமையல் எண்ணெய் கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. ரூ.150 ஆக பாமாயில் விலை தற்போது ரூ.185 ஆக அதிகரித்துள்ளது.

வெல்லம்

கடந்த மாதம் வரை 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெல்லம் தற்போது ரூ.100 ஆக அதிகரித்துள்ளது. இதே போல ரூ.700க்கு விற்கப்பட்ட முந்திரி கிலோ தற்போது ரூ.950 ஆக கூடியுள்ளது. பாதாம் பருப்பு 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை மட்டும் குறைந்துள்ளது. கிலோ ரூ.70 ஆக இருந்த சர்க்கரை தற்போது ரூ.55 ஆக குறைந்துள்ளது.

அரிசி

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளான அரிசியின் விலையும கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை கூடியுள்ளது. 26 கிலோ சாப்பாடு அரிசி மூட்டை ரூ.300 ரூபாய் முதல் ரூ.500 வரை அதிகரித்துள்ளது. ரூ.1000 ஆக இருந்த அரிசி மூட்டை ரூ.1500 ஆகவும் ரூ.1500 ஆக இருந்த மூட்டை ரூ.2000 ஆகவும் உயர்ந்துள்ளது.

நெல் வரத்து குறைந்தது

அரிசி விலை உயர்க்குவுக் முக்கிய காரணம் நெல் வரத்து குறைந்தது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு அதிக அளவில் அரிசி வருகிறது. அந்த மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தமிழகத்துக்கான வரத்தும் குறைந்துள்ளது.

அரிசி வியாபாரிகள்

இதனால் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. புதிய அரிசி வரத்தை தொடங்கும் போது தான் விலை குறையும் என்று அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கறிகள் விலை

மளிகை பொருட்களின் விலை மட்டுமல்லாது காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட் மற்றும் பீன்ஸ் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. இவற்றின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளன. தக்காளி, உருளைக்கிழங்கு விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரி த்துள்ளதாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

மாதாந்திர பட்ஜெட்

அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மாதாந்திர செலவு அதிகரிக்கிறது. இதனால் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. பொருட்களை போதுமான அளவு வாங்க முடியவில்லை. வருகின்ற பண்டிகை காலங்களில் இது பொதுமக்களை அதிகளவு பாதிக்கும் என்பதால் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com