அரசு பஸ்கள் நிறம் மாற்றப்படுகிறதா?

விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இந்த புதிய வண்ணத்திலான பஸ்களின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அரசு பஸ்கள் நிறம் மாற்றப்படுகிறதா?
Published on: 
Summary

அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது மின்சார பஸ்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைந்த பச்சை நிறத்திலான ‘பி.எஸ்.-6’ ரக புதிய பஸ்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

1,614 புதிய பஸ்கள்

அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது மின்சார பஸ்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வாகனங்கள் வெளியிடும் புகை மாசின் அளவானது ‘பாரத் ஸ்டேஜ்’ (பி.எஸ்.) என்ற அளவீட்டில் கணக்கிடப்படுகிறது. இதில் ‘பி.எஸ்.-6’ என்பது இந்தியாவின் புதிய மாசு உமிழ்வு தரமாகும். முந்தைய ‘பி.எஸ்.-4’ ரக வாகனங்களுடன் ஒப்பிடும்போது, ‘பி.எஸ்.-6’ ரக வாகனங்கள் நைட்ரஜன் ஆக்சைடு வாயுவை 70 சதவீதம் வரையிலும், நுண்துகள்களை 80 சதவீதம் வரையிலும் குறைத்து சுற்றுச்சூழல் பாதிப்பை பெருமளவு தடுக்கின்றன.

புதிய பஸ்

இதன் அடிப்படையில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ‘பி.எஸ்.-6’ தரத்திலான 1,614 புதிய பஸ்களை வாங்குவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் வெளியிடப்பட்டது. அதன்படி அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த புதிய பஸ்களை தயாரித்து வருகிறது.

இந்த புதிய பஸ்களில் வாகனத்தின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறியும் நவீன ஜி.பி.எஸ். கருவி, பஸ்சின் 2 பக்க கதவுகளும் மூடிய பிறகே வாகனத்தை இயக்க முடியும் என்ற பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பச்சை நிறம்

சமீபத்தில் தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்களுக்கு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறமான சிவப்பு மற்றும் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. தற்போது புதிதாக கொள்முதல் செய்யப்படும் புறநகர் பஸ்களின் வண்ண வடிவமைப்பை போக்குவரத்து துறை மாற்றியமைத்துள்ளது. வெறும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களுக்கு பதிலாக பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய 3 நிறங்கள் கொண்ட புதிய வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுமான பணி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இந்த புதிய வண்ணத்திலான பஸ்களின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்தவுடன், இந்த புதிய பச்சை நிற பஸ்கள் படிப்படியாக தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து கோட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. பச்சை நிறத்திலான புதிய அரசு பஸ்சின் புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

X