

நாங்குநேரி அருகே மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டுகளில் பயணம் செய்ததை கண்டித்த கண்டக்டர் மற்றும் டிரைவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர்கள் சீட்டுகளை கிழித்து ரகளையில் ஈடுபட்டதால் பஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, பஸ்சை மீண்டும் இயக்கச் செய்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து அசாத்தான் குளத்திற்கு அரசு பஸ் இயங்கி வருகிறது.
இந்த பஸ்சில் தினசரி மூலைக்கரைப்பட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் மூலைக்கரைப்பட்டி பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். மாணவர்கள் பஸ்சின் படிகளில் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மூலைக்கரைப்பட்டியில் இருந்து அசாத்தான்குளம் நோக்கி பஸ் புறப்பட்டு சென்றது. தெய்வநாயக பேரி சாலையில் சென்ற போது பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை கண்டக்டர் பஸ்சுக்குள் வருமாறு அழைத்தார். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து படிக்கட்டுகளில் நின்றவாறு பயணம் செய்தனர். இதனை கண்டக்டர் மற்றும் டிரைவர் கண்டித்தனர். இதில் அவர்களுக்கும் மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் பஸ்சில் சீட்டுகளை கிழித்து எரிந்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். அத்துடன் கண்டக்டர், டிரைவரை அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டிரைவர் பஸ்சை இயக்க மறுத்து சாலையில் நிறுத்தினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்களையும் எச்சரித்தனர். அதன்பின் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.