

இணையவழி பத்திரப்பதிவு விரிவாக்கம் காரணமாக, சனிக்கிழமைகளில் இனி 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பதிவாளர்களின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில் இனி வார நாட்களில் மட்டுமே அலுவலகம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவை குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் எனவும், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும் எனவும் தமிழ்நாடு சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை சுட்டிக்காட்டி,
“பதிவுத்துறை தலைவரின் கருத்துருவினை கவனமாக பரிசீலனை செய்தபின், அவரின் கருத்துருவினை ஏற்று 2026-2027 ஆம் ஆண்டு பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அமைச்சர் வெளியிட்ட,
‘வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் என்பது தொடர்பான அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு,
ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து, தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப் பணி முறையை 01.11.2026 முதல் கைவிடலாம் என அரசு முடிவு செய்து, அவ்வாறு ஆணையிடப்படுகிறது.” என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வார விடுமுறை நாட்களில் ஆவணப் பதிவுகளை எளிதாகச் மேற்கொள்ளும் வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, பணிச்சுமை அதிகம் கொண்ட 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அரசாணைதான் ரத்து செய்யப்பட்டுள்ளது.