

குடியிருப்பு நுழைவு வாயிலில் தனியார் காவலாளிகள் மூலம் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காரணம்பட்டு மேம்பாலம் அருகே தனியார் நிறுவன குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்பு சேர்ந்தவர் இர்வின். இவர் வங்கியில் மேலாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிறிஸ்டியானா. இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த கொள்ளை கும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர்.
பீரோவை திறந்து அதில் இருந்த 50 பவுன் தங்க வைர நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு வந்த வழியே வெளியேறினர்.
பின்னர் அருகில் உள்ள அடுத்தடுத்த 2 டாக்டர்கள் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததால் கொள்ளையடித்த நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளனர். இன்று காலை கண் விழித்த டாக்டர் குடும்பத்தினர் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். டாக்டர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளை போனதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருவலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் வேலூரில் இருந்து மோப்பநாய் கொண்டுவரப்பட்டு கொள்ளை நடந்த வீட்டிலிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? வடமாநில கும்பல் ஈடுபட்டார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்பு நுழைவு வாயிலில் தனியார் காவலாளிகள் மூலம் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.