தீபாவளி- அய்யலூர் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நீண்ட கால கோரிக்கையை ஏற்று அய்யலூர் வாரச்சந்தையை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி- அய்யலூர் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Published on: 

இந்தியா முழுவதும் வருகிற 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அசைவ உணவு விருந்து வைப்பார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடு, சேவல், நாட்டுக் கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள், தக்காளி, கண்வலிக்கிழங்கு, சீனிக்கொய்யா ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

சேலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தேனி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் பொருட்கள் கொள்முதல் செய்ய இங்கு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை

இந்தியா முழுவதும் வருகிற 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அசைவ உணவு விருந்து வைப்பார்கள். குறிப்பாக புதுமணத் தம்பதிகளுக்கு தலைதீபாவளி விருந்து அமர்க்களப் படுத்தப்படும். இதற்காக ஆடுகள், கோழி, சேவல்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டினர். அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய வாரச்சந்தை காலை 9 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.5 கோடிக்கு விற்பனை

தரமான நாட்டுக் கோழிகள் 1 கிலோ ரூ.500க்கும், சேவல்கள் ரூ.450க்கும் விற்பனையானது. 10 கிலோ கொண்ட மறுக்கை ஆடுகள் ரூ.11 ஆயிரம், கிடா ரூ.13 ஆயிரம், நாட்டுச் சேவல்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. விலை அதிகரித்த போதும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடு, கோழிகளை வாங்கிச் சென்றனர். தங்களது கால்நடைகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் விரைவாக விற்றுவிட்டு சென்றனர்.

இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடிக்கும் மேலாக விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வாரச்சந்தை தேசிய நெடுஞ்சாலையிலேயே நடத்தப்படுவதால் பொதுமக்கள், பயணிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நீண்ட கால கோரிக்கையை ஏற்று அய்யலூர் வாரச்சந்தையை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X