

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணி முதலே ஆட்டுச்சந்தை விறுவிறுப்பாக தொடங்கியது. அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்ததால் சந்தை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடலூர் மாவட்டம் வடலூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு வடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் வெள்ளாடு, கொடிஆடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணி முதலே ஆட்டுச்சந்தை விறுவிறுப்பாக தொடங்கியது. அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்ததால் சந்தை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடுகளை வாங்குவதற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் குவிந்தனர்.
இதனால் அதிகாலை முதலே ஆடுகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. ஆடுகளின் எடை, ரகம் மற்றும் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி குவித்தனர்.
ேமலும் இன்று ஒருநாள் விற்பனையில் மட்டும் சுமார் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகளை வாங்கி சென்றதால் சந்தை விற்பனை களைகட்டியது.
வடலூர் ஆட்டுச் சந்தையில் தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் ஆடுகளின் விற்பனை வழக்கத்தைவிட அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தீபாவளி பண்டிகையின்போது சுமார் ரூ.1 கோடிக்கு அதிகமாக ஆடுகள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு விற்பனை அதிகமாகி இருப்பது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.