தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகை என்பதால் விற்பனையாகும் ஆடுகளின் விலை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் வரை விற்பனையானது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை
Published on: 
Summary

திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் விற்பனையாகும் ஆடுகளின் இறைச்சி சுவை மிகுந்ததாக இருப்பதால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் நடைபெறும். இந்தநிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்றைய தினம் அசைவ பிரியர்கள் வழக்கத்தை விட கூடுதலாக இறைச்சி வாங்கிச் செல்வார்கள்.

இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் மிக முக்கிய ஆட்டுச் சந்தையான திருமங்கலம் சந்தையில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து செம்மறி மற்றும் வெள்ளாடுகள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

திருமங்கலம் ஆட்டுச் சந்தை

திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் விற்பனையாகும் ஆடுகளின் இறைச்சி சுவை மிகுந்ததாக இருப்பதால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். இந்த ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் மட்டுமல்லாது மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் வாங்க வந்திருந்தனர்.

தீபாவளி பண்டிகை என்பதால் விற்பனையாகும் ஆடுகளின் விலை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் வரை விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை என்பதால் வேறு வழியின்றி வாங்கிச் செல்கிறோம். கடந்த ஆண்டு கிலோ 750 ரூபாய் மதிப்பீட்டில் விற்கப்பட்ட ஆடுகள் இந்த ஆண்டு ரூ.950, ரூ.1000 என விற்பனையாகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு விலை கூடுதலாக விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

ஆடுகள்

ஆடுகள் வளர்ப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதிகாலை 2 மணி முதல் ஆடுகள் விற்பனை களைகட்டியது. இன்று ஒரு நாள் மட்டும் ரூ.7 கோடி மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தகவல் தெரிவித்தனர்.

திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வரக்கூடிய சூழலில் ஆட்டுச் சந்தையில் இட வசதி போதுமானதாக இல்லை எனவும், கடும் நெரிசல் ஏற்படுவதால் ஆடுகளை விற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், எனவே ஆட்டுச் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து போதுமான வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஆட்டு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X