சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல், வதந்திகளால் மன உளைச்சல்- செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி

சிறுமியின் தாய் தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல், வதந்திகளால் மன உளைச்சல்- செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி
Published on: 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்-பவானி தம்பதி.

சிறுமி மாயம்

இவர்களது 2-வது மகள் (வயது7). சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி பெற்றோர், உறவினர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, மறுநாள் 12-ந் தேதி அதிகாலை மாயமானார்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை

சிறுமி மாயமாகி இன்றுடன் 23 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை சிறுமி பற்றி எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும் சிறுமி எப்படியும் உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் தாய் தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன உளைச்சல்

இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்களுக்கு ஆதரவாக ஊடகங்களும், சமூக வலைதளங்களில் பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி. அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் சிலர் எங்களை பற்றி தவறாக பேசி வருகிறார்கள்.

அதில் பரப்பப்படும் தவறான தகவல்களும், வதந்திகளும் எங்களுக்கு மன உளைச்சல், உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நாங்கள் பசி, பட்டினியில் இருக்கிறோம்.

நாங்கள் வழக்கமாகவே வெளியில் தான் படுத்திருப்போம். சம்பவத்தன்று வீட்டிற்குள் படுத்திருந்தோம். காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தோம். பக்கத்து வீட்டில் உள்ளவர் சிறுமி சத்தம் கேட்டதாக சொல்கிறார். ஆனால் எங்களுக்கு அப்படி எந்த சத்தமும் கேட்கவில்லை.

குழந்தையை மீட்டு தந்தாலே போதும்

எனது வீட்டில் எந்த திருட்டும் நடக்கவில்லை. நகையோ, பணமோ என எதுவும் திருடப்படவில்லை. வீடுபுகுந்து எனது மகளை தூக்கி சென்றவர்கள், எனது வீட்டில் நகை, பணத்தை திருடவில்லை. குழந்தையை தூக்கி செல்வதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம். எனது மகளை எப்படியாவது மீட்டு தாருங்கள். விரைவில் குழந்தையை கண்டுபிடித்து தந்தாலே போதும். எங்கள் குழந்தையை மீட்க தமிழக முதலமைச்சரும், போலீஸ் உயர் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை எப்படி விசாரிக்கின்றனர் என கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளித்து கூறும்போது,

சி.பி.சி.ஐ.டி. போலீசார் எனது குழந்தையை தொடர்ந்து தேடி வருகின்றனர். குழந்தையை கண்டுபிடிக்காமல் நாங்கள் போகமாட்டோம். எவ்வளவோ குழந்தைகளை நாங்கள் கண்டுபிடித்து இருக்கிறோம். ஆனால் இந்த குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. கட்டாயம் இந்த குழந்தையை கண்டுபிடிக்காமல் நாங்கள் போக மாட்டோம் என தெரிவித்ததாக சிறுமியின் தாய் கூறினார்.

X