

மாயமான சிறுமியை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், தற்போது செஞ்சி பகுதியில் மீண்டும் ஒரு சிறுமியை கடத்த முயற்சி செய்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 12-ந் தேதி மாயமானார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையிலான போலீசார் மாயமான சிறுமியை தேடி வருகின்றனர். சிறுமி மாயமாகி ஒரு மாதமாகி விட்டது. ஆனால் இன்னும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் ஒரு சிறுமியை கடத்த முயற்சித்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் 7 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சிறுமி அங்குள்ள பெட்டி கடைக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்து சிறுமியை கடத்த முயற்சி செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியான சிறுமி சத்தம் போட்டார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்ததும், ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் சிறுமியை சாலையிலேயே விட்டுவிட்டு ஆட்டோவில் தப்பி சென்றனர்.
இது குறித்து சிறுமியின் தந்தை செஞ்சி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவில் வந்து சிறுமியை கடத்த முயன்ற நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஜெயங்கொண்டான் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே மாயமான சிறுமியை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், தற்போது செஞ்சி பகுதியில் மீண்டும் ஒரு சிறுமியை கடத்த முயற்சி செய்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பகுதி பொதுமக்களிடமும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.