

சிறுமியின் உறவினர்கள் சிலர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேலு-பவானி தம்பதியினர்.
இவர்களது 2-வது மகள் (வயது7). கடந்த 12-ந் தேதி அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி மாயமானாள். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். மேலும் 10 தனிப்படைகள் அமைத்தும் தேடும் பணி நடந்தது. ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா, வேல்முருகன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை தேடி வருகின்றனர்.
ஆலம்பூண்டியில் உள்ள பள்ளியில் தற்காலிக விசாரணை மையம் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 6 நாட்களாக சிறுமியின் தாய், தந்தை, பாட்டி, சகோதரி மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.
மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து 6 மணி நேரமாக விசாரணை நடத்தினர். ஆனாலும் விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் 2-ம் கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா, வேல்முருகன் தலைமையிலான போலீசார் சிறுமி படித்த பள்ளிக்கு சென்று, அங்கு மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேட்டை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
பின்னர் பள்ளியில் இருந்த ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிறுமியின் பள்ளி நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.
இதேபோன்று சிறுமியின் சகோதரி படித்து வரும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் உள்ள கல்லூரிக்கும் சென்று, அங்கு அவரது தோழிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர சந்தேகத்தின் பேரில் 2 இளைஞர்களிடமும் விசாரணை நடந்தது. அவர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக சில விவரங்கள் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.
அப்போது சிறுமியின் உறவினர்கள் சிலர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஒரு குழுவினர் பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.
சிறுமி மாயமாகி இன்றுடன் 18 நாட்கள் ஆகிறது. ஆனாலும் இந்த வழக்கில் நாளுக்கு நாள் மர்ம கதையாக நீடித்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் தனது மகள் உயிருடன் எங்களிடம் வந்து சேருவாள் என சிறுமியின் தாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எங்கள் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று பூ போட்டு பார்த்தோம். அதில் குழந்தை உயிருடன் இருக்கிறது என சொல்லி இருக்கிறார்கள். அதனால் கட்டாயம் எங்கள் குழந்தை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. போலீசாரும் நன்றாக விசாரித்து வருகின்றனர். இன்னும் 2, 3 நாட்களில் நல்ல தகவலை சொல்வதாக போலீசார் கூறியுள்ளனர். எனவே எனது குழந்தை உயிருடன் எங்களிடம் வந்து சேரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறுமியின் தாய் பூ கட்டி போட்டு பார்த்தது குறித்து சிவன்கோவில் பூசாரி சுந்தரமூர்த்தி கூறுகையில், நான் இந்த கோவிலில் 4 வருடமாக பூசாரியாக வேலை பார்த்து வருகிறேன். இந்த ஊரில் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழக்கமாக தங்களது விவசாய நிலத்தில் பயிர்கள் பயிரிடுவதற்கு முன்பாக இந்த கோவிலுக்கு வந்து எந்த பயிர் பயிரிடலாம் என கேட்டு செல்வார்கள். சாமி கொடுக்கும் பதில் வருவதை அவர்களும் விளைவிப்பர்.
இந்த நிலையில் இந்த பகுதியில் சிறுமி மாயமானதை அடுத்து, சிறுமியின் தாய், தனது மூத்த மகள் மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்தார். அவர் கோவிலில் சிறுமி கிடைப்பாளா? விபூதி, குங்குமம் கட்டி போட்டு பார்த்தார். அப்போது 2 முறை விபூதியும், 3-வது முறை குங்குமும் வந்தது. குழந்தை கிடைக்கும் என்றே வந்துள்ளது. குழந்தை மாயமானது எங்களுக்கும் வருத்தம் தான். குழந்தையை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.