செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்

சிறுமி மாயமானது தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்
Published on: 
Summary

ஆலம்பூண்டியை சுற்றியுள்ள 64 கிணறுகள், ஏரிகள், குளங்கள் என பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதுதவிர, சிறுமியின் வீட்டின் பின்புறம் உள்ள சிறுவாடி காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பல நாட்கள் தேடுதல் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த மாதம் 12-ந் தேதி அதிகாலை மாயமானார்.

சிறுமி மாயம்

சிறுமி மாயமானது தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பிக்கள் கீதா, வேல்முருகன் தலைமையிலான போலீசார் ஆலம்பூண்டி கிராமத்திலேயே முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி மாயமாகி இன்றுடன் 39 நாட்களை கடந்து விட்டது. ஆனால் இன்று வரை சிறுமி பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எந்த தடயமும் சிக்கவில்லை.

விசாரணை

கடந்த மாதம் 21-ந் தேதி விசாரணையை தொடங்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதலில் சிறுமியின் தாய் பவானி, தந்தை வடிவேல், பாட்டி சாந்தி, சிறுமியின் சகோதரியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சிறுமியின் வீட்டின் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் விசாரணை செய்தனர். சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த ரவுடி, அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சிறுமியின் வீட்டில் இருந்து 2 கி.மீ தூரத்திற்கு சி.சி.டி.வி கேமராக்கள் இல்லை. 2 கி.மீ தூரத்திற்கு பிறகு தான் முதல் சி.சி.டி.வி. கேமரா உள்ளது. சம்பந்தப்பட்ட கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிலும் எதுவும் கிடைக்கவில்லை.

சிறுமியின் வீட்டில் இருந்து 6 கி.மீ சுற்றளவில் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலைகள் உள்ளது. அந்த பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விட்டனர். ஆனால் எதிலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

கிணறுகள், ஏரிகள்

ஆலம்பூண்டியை சுற்றியுள்ள 64 கிணறுகள், ஏரிகள், குளங்கள் என பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதுதவிர, சிறுமியின் வீட்டின் பின்புறம் உள்ள சிறுவாடி காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பல நாட்கள் தேடுதல் நடத்தினர். ஆனால் அதிலும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்பு செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், தடயவியல் நிபுணர்கள் மூலமாக அங்கு சாம்பல்களை சேகரித்து சென்னை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதன் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

எந்த தகவலும் இல்லை

இப்படி தங்களுக்கு சாத்தியமான அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தி விட்டனார். ஆனால் சிறுமி மாயமாகி 39 நாட்களை கடந்த பின்னரும் சிறுமியை பற்றிய எந்த ஒரு தடயமும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தற்போது மீண்டும் தங்கள் விசாரணையை சிறுமியின் குடும்பத்தினரிடம் இருந்து ஆரம்பித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தையிடம் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட சி.பி.சி.ஐ..டி போலீசார் கடந்த 2 தினங்களாக சிறுமியின் தாய் பவானியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி காணாமல் போன அன்று இரவு நடந்த சம்பவங்கள், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 39 நாட்களாகியும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கிராம மக்கள் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

X