

ஆலம்பூண்டி பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர் வடிவேலு-பவானி தம்பதியினர்.
இந்த தம்பதியின் 2-வது மகள் (வயது7). சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 11-ந் தேதி இரவு தனது பெற்றோர், உறவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி விட்டு வீட்டில் தூங்கியவர் மறுநாள் 12-ந் தேதி அதிகாலை மாயமாகி விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து இந்த வழக்கு கடந்த 21-ந் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையிலான போலீசார் ஆலம்பூண்டி கிராமத்திலேயே கடந்த 5 நாட்களாக முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் தாய், தந்தை, பாட்டி ஆகியோரிடம் கடந்த சில நாட்களாக பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுதவிர சிறுமியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அவரது உறவினர்களிடமும் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் போது அவர்கள் தெரிவித்த அனைத்து தகவல்களையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் பதிவு செய்து கொண்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை விரிவுபடுத்தும் விதமாக கூடுதல் விசாரணை அதிகாரியாக காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் நியமிக்கப்பட்டார். அவரும் நேற்று முதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.
மேலும் சிறுமியை மீட்பதற்காக கடலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் 20 பேர் வரவழைக்கப்பட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி சிறுமியை தேடி வருகின்றனர்.
சிறுமி விற்கப்பட்டளா? சிறுமி கடத்தப்பட்டாளா? என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, 5-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஆலம்பூண்டி பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, கூடுதல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையிலான போலீசார் 4 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
அதன்பின்னர் அந்த ரவுடியை ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள சிறுமி படித்த பள்ளிக்கு அழைத்து வந்தும் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து ஆலம்பூண்டியில் உள்ள சுடுகாடு பகுதிக்கும், அதன் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பகுதிக்கும் நேரில் அழைத்து சென்று ஆய்வு மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2-வது நாளாக அந்த ரவுடியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் சம்பவத்தன்று ஆலம்பூண்டி பகுதிக்கு எதற்காக வந்தார்? அவரது நோக்கம் என்ன? சிறுமி மாயமான சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.