

செஞ்சி சிறுமி மாயமாகி இன்றுடன் 25 நாட்களை கடந்து விட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மாயமான சிறுமியை கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த தத்தகிரி பகுதியில் பார்த்ததாக இருவர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் சிறுமியின் தாய் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரது கையில் ஒரு புதுத்துணியும் இருந்தது.
எனது மகள் காணாமல் போனதில் இருந்து நான் வேதனையில் இருக்கிறேன். எனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள்.
பிறந்தநாளுக்கு துணி எடுத்தபோதே, தீபாவளிக்கும் சேர்த்து துணி எடுத்தோம். இது தான் அந்த புதிய துணி என காண்பித்தார். இதனை தான் குழந்தை பிறந்தநாளுக்கு போடுவேன் என்றாள். ஆனால் இதனை தீபாவளிக்கு போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தோம். இந்த புதுத் துணியை போட்டுக் கொள்ளவாவது எனது மகள் எனது வீட்டிற்கு வர வேண்டும் என கண்ணீர் மல்க சிறுமியின் தாய் தெரிவித்தார்.