செஞ்சி சிறுமி: 600 பேரின் செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்து விசாரணை

3 செல்போன் டவர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
செஞ்சி சிறுமி: 600 பேரின் செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்து விசாரணை
Published on: 
Summary

அக்டோபர் 11-ந் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அந்த டவர்களில் 600 பேரின் செல்போன் அழைப்புகள் பதிவாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளி வடிவேலு-பவானி தம்பதியினர்.

சிறுமி மாயம்

இவர்களது 2-வது மகள் (வயது 7). கடந்த 12-ந் தேதி சிறுமி மாயமானாள். இது தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள், 100-க்கும் மேற்பட்ட போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.

டிரோன் கேமரா, மோப்ப நாய்கள் உதவியுடன் தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

600 செல்போன் எண்கள் ஆய்வு

சிறுமி மாயமாகி இன்றுடன் 20 நாட்களை கடந்து விட்டது. இன்னும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை மிக முக்கியமான கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆலம்பூண்டி பகுதியில் செயல்பாட்டில் இருந்த 3 செல்போன் டவர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

மர்ம நபர்களின் நடமாட்டம்

சம்பவ நாளான அக்டோபர் 11-ந் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அந்த டவர்களில் 600 பேரின் செல்போன் அழைப்புகள் பதிவாகியுள்ளன. அன்று இரவு அப்பகுதியில் இருந்த மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்டறிய இந்த அழைப்பு பதிவுகள் முக்கிய ஆதாரமாக இருக்கும் என கருதி, அந்த 600 பேரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விசாரணை

சிறுமியின் தாய், தந்தை, பாட்டி, சகோதரி, உறவினர்கள், சிறுமியின் சகோதரிக்கு பெண் பார்த்ததாக கூறப்படும் மாப்பிள்ளை வீட்டார், கிராமத்தை சுற்றியுள்ள சிறு வழக்கு முதல் பெரிய வழக்கு வரை உள்ள குற்றவாளிகள், ஆஞ்சநேயர் கோவில் பூசாரி, ஜாதகம் எழுதியவர் என பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று சி.பி.சி.ஐ.டி போலீசார் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி காணாமல் போன அன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை அந்த செங்கல் சூளை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதனை மையமாக வைத்து செங்கல் சூளையின் உரிமையாளர் மற்றும் 4 பணியாளர்கள் என மொத்தம் 5 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்று 20-வது நாளாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

X