

செங்கல் சூளை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல்.
இவரது மகள் (வயது7). கடந்த 11-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, மறுநாள் அதிகாலை வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உள்ளூர் போலீசார் 10 நாட்களாக தீவிரமாக தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, வழக்கு கடந்த 21-ந் தேதி சி.பி.சி..ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேல்முருகன் கீதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலம்பூண்டி கிராமத்தில் சிறுமி படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்தை தற்காலிக விசாரணை மையமாக அமைத்து அங்கு வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுமியின் தாய் பவானி, பாட்டி சாந்தி மற்றும் சகோதரி ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். இதுதவிர சரித்திர பதிவேடு குற்றவாளி, சாமியார் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பெங்களூரில் சிறுமி இருப்பதாக வந்த தகவலின் பேரில் தந்தையின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தினர்.
நேற்றிரவு சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 2 நாட்களாக சிறுமியின் தந்தை வடிவேலுவிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சிறுமியின் தந்தை வடிவேலுவிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அவரை தற்காலிக விசாரணை மையத்திற்கு வரவழைத்து அவரிடம் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கீதா தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கிராமத்தில் உள்ள பொது மக்களிடமும் மீண்டும் விவரங்களை கேட்டறிந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தரைவழி தேடுதலில் பலன் இல்லாததால், சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று டிஜிட்டல் வேட்டையில் இறங்கியுள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவில் ஆலம்பூண்டி பகுதியில் இருந்த 3 செல்போன் டவர்களின் டவர் டம்ப் தரவுகளை கைப்பற்றி, அந்த நேரத்தில் ஆக்டிவாக இருந்த 600-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை ஆய்வு செய்து, சந்தேகத்திற்குரிய எண்களை டேப் செய்து கண்காணித்து வருகின்றனர்.
21 நாட்கள் கடந்தும் சிறுமி குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லாததால் கிராம மக்கள் காவல்துறை மீது நம்பிக்கை இழந்துள்ளனர். சிறுமியை உயிருடன் மீட்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.