பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் திடீரென விழுந்த ராட்சத பாறை: போக்குவரத்து துண்டிப்பு

ராட்சத பாறை விழுந்த வேகத்தில் அந்த சாலை பலத்த சேதம் அடைந்தது.
பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் திடீரென விழுந்த ராட்சத பாறை: போக்குவரத்து துண்டிப்பு
Published on: 
Summary

பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் நேற்று இரவு ராட்சத பாறை ஒன்று விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

ராட்சத பாறை சரிந்தது

நேற்று மாலையும் கோவை மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை கொட்டியது. பொள்ளாச்சி, வால்பாறை பகுதியிலும் மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்தநிலையில் பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் நேற்று இரவு ராட்சத பாறை ஒன்று விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் வால்பாறையில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வால்பாறை

வால்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலை அடிவாரத்தின் கீழ் பகுதியில் இருந்து 1-வது கொண்டை ஊசி வளைவு தொடங்குகிறது. இதில் 2-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து ராட்சத பாறை ஒன்று சரிந்து 1-வது கொண்டை ஊசி வளைவில் வந்து விழுந்தது. அந்தசமயத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனம் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

போக்குவரத்து துண்டிப்பு

இருந்தாலும் ராட்சத பாறை விழுந்த வேகத்தில் அந்த சாலை பலத்த சேதம் அடைந்தது. ஒரு மோட்டார்சைக்கிள் கூட சாலையை கடக்க முடியாதவகையில் ராட்சத பாறை ரோட்டில் விழுந்து கிடந்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கும், அங்கிருந்து இங்கும் வாகனங்கள் வர முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தீயணைப்புத்துறை

சம்பவ இடத்துக்கு தீயணைப்புத்துறையினரும், போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத பாறை என்பதால் உடனடியாக அதனை அகற்ற முடியவில்லை. இன்று காலை ராட்சத பாறையை உடைக்கும் பணி நடந்தது. பல மணி நேரமாக அந்த பாறையை அங்கிருந்து அகற்றும் பணி நடந்தது. பாறையை அகற்றிய பிறகு சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், அதன்பிறகே அந்த சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

பால் வினியோகம் பாதிப்பு

போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொள்ளாச்சியில் இருந்து பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவசர உதவிக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வால்பாறையில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பலர் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலேயே வசிக்கிறார்கள். அவர்களும் இன்று பள்ளிக்கு சென்று பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வால்பாறைக்கு சென்று இருந்த சுற்றுலாபயணிகளும் திரும்ப முடியாமல் அங்கேயே முடங்கி கிடந்தனர். சுற்றுலாபயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இன்று மாலைக்குள் நிலைமை சீராகும் என்ற எதிர்பார்ப்பில் அவர்களும் காத்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com