

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்ல முயன்ற ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணியை எஸ்.ஐ.டி. போலீசார் இன்று விமான நிலையத்தில் மடக்கி பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் திடீரென அவர் மயங்கியதை அடுத்து போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமிகளை மிரட்டி பாலியல் தொல்லை அளித்த புகாரில் தமிழ் நாட்டின் முன்னணி தொழிலதிபராக வலம் வந்த 82 வயதான ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 7 போக்சோ வழக்குகள், 2004-இல் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜெம் வீரமணி மட்டுமின்றி அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுவரை ஜெம் வீரமணியின் உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர இந்த விவகாரம் குறித்த விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விரைவில் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணியை போலீசார் நேற்று விமான நிலையத்தில் மடக்கி பிடித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட தயாரான நிலையில் அவரை போலீசார் பிடித்தனர்.
அதன்பிறகு அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு தீவிரமாக விசாரித்தனர். ஜெம் வீரமணியின் வழக்கை மூடி மறைக்க பெரிய அளவில் பணம், நகைகள் லஞ்சமாக கைமாறி உள்ளதாக கூறப்படும் நிலையில் அதுதொடர்பான விவரங்கள் அர்ச்சனா வீரமணிக்கு தெரிந்திருக்கலாம். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தும் நோக்கில் அவரை பிடித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விசாரணையின்போது திடீரென்று அர்ச்சனா வீரமணி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.