

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்குகள் தொடர்பாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்துகிறது.
வீரமணி விவகாரத்தில் ஜான் பாண்டியனை வைத்து பேரம் பேசியதாக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் கூறியிருந்த நிலையில், ஜான் பாண்டியனுக்கு எஸ்ஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, வீரமணிக்கும் சாந்திக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் காங்கிரஸ் பிரமுகர் அழைப்பின் பேரில்தான் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வந்ததாகவும், சிறுமிகள் பாலியல் விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை 12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் 8 வழக்குகள் வீரமணி மீது பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 பேருக்கு சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.