

சென்னை கடற்கரை-பரங்கிமலை பறக்கும் ரெயில் பாதையில் 17 ஆண்டுகள் தாமதத்திற்கு பின் வேளச்சேரி வரை சேவை தொடங்கியுள்ள நிலையில், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டும் ஆதம்பாக்கத்தில் ரெயில் நிற்காததால் நங்கநல்லூர், உள்ளகரம், மடிப்பாக்கம் பகுதிப் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பிளாட்பாரமும் ரெயிலுக்கும் இடையேயான அதிக இடைவெளி காரணமாக பாதுகாப்பு ஆய்வில் அனுமதி மறுக்கப்பட்டு, மறுவடிவமைப்பு பணிகள் நீண்டுகொண்டே செல்கின்றன.
சென்னை கடற்கரை- பரங்கிமலை இடையேயான பறக்கும் ரெயில் வழித்தடத்தில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை ரெயில் சேவை இருந்து வந்த நிலையில் 17 ஆண்டுகால தாமதத்துக்கு பிறகு 4.5 கிலோ மீட்டர் பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
வேளச்சேரி-பரங்கிமலை இடையே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் ஆதம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பணிகள் முழுமை அடையாததால் ரெயில் நிற்பதில்லை. சுமார் 8 மாதங்கள் ஆகியும் இந்த ரெயில் நிலையத்தின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு ரெயில் நிற்க ஏற்பாடு செய்யவில்லையே என்று பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள்.
இந்த ரெயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால் நங்கநல்லூர், உள்ளகரம், மடிப்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு எளிதாக இருக்கும்.
இந்த ரெயில் நிலையத்தை தலைமை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக்குமார் கார்க் ஆய்வு செய்த போது ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையேயான இடைவெளி அனுமதிக்கப்பட்டதைவிட 20 செ.மீ. வரை அதிகம் இருந்ததை கண்டுபிடித்ததால் இந்த ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்த அனுமதி வழங்கவில்லை. மறுவடிவமைப்பை உருவாக்கி சரி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. பிளாட்பாரத்தை உயர்த்தி இடைவெளியை குறைக்கும் வேலைகள் மட்டும் முடியாமல் இருந்தது.
இதற்கு இத்தனை மாதங்களா? எப்போதான் ஆதம்பாக்கத்தில் ரெயிலை நிறுத்துவீங்க.. என்று ரெயில் பயணிகள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்.