கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிய நிலையில் குப்பையில் வீசப்பட்ட பழங்கள், பூக்கள்

பழங்கள் மற்றும் பூக்கள் அழுகியதால் வியாபாரிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிய நிலையில் குப்பையில் வீசப்பட்ட பழங்கள், பூக்கள்
Published on: 
Summary

பலத்த மழை பெய்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை பொருட்களான பழங்கள், பூக்கள், காய்கறிகள் ஆகியவை விற்காமல் தேங்கியது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி சிறப்பு சந்தை தொடங்கி விற்பனை நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் அவல், பொரி, வாழைக்கன்று, பூசணிக்காய், கரும்பு, தோரணம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தனர். மேலும் ஆயுத பூஜைக்காக பழங்கள் மற்றும் பூக்களும் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ஆயுத பூஜை

ஆயுத பூஜைக்கு 2 நாட்களுக்கு முன்பே சென்னையில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை பொருட்களான பழங்கள், பூக்கள், காய்கறிகள் ஆகியவை விற்காமல் தேங்கியது.

வியாபாரிகள் பெரும் நஷ்டம்

ஆயுத பூஜை முடிவடைந்த நிலையில் பழங்கள் மற்றும் பூக்கள் இன்னும் விற்பனையாகாமலேயே உள்ளன. இதனால் அவை அழுகத்தொடங்கி உள்ளன. அவற்றை வியாபாரிகள் சந்தையின் ஒரு ஓரத்தில் கொட்டி வைத்துள்ளனர். குறிப்பாக ஆரஞ்சு பழம் மற்றும் பூசணிக்காய் ஆகியவை அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. அவை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. மேலும் வாழக்கன்றுகளும் விற்காமல் குப்பையில் வீசப்பட்டு உள்ளன. பழங்கள் மற்றும் பூக்கள் அழுகியதால் வியாபாரிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்

ஆயுத பூஜை முடிவடைந்ததை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விலை குறைந்துள்ளது. ஆயுத பூஜையின் போது கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் தற்போது ரூ.10 ஆக குறைந்துள்ளது. ரூ.30-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.25 ஆகவும், ரூ.70-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ.50 ஆகவும், ரூ.20-க்கு விற்கப்பட்ட சுரைக்காய் ரூ.10 ஆகவும் விலை குறைந்துள்ளது. ஆயுத பூஜையின் போது ஒரு பூசணிக்காய் ரூ.100-க்கு விற்கப்பட்டது. அது தற்போது ரூ.50-க்கு விற்கப்படுகிறது. ரூ.100-க்கு விற்கப்பட்ட ஆரஞ்சு பழம் ரூ.50 ஆகவும், ரூ.250-க்கு விற்கப்பட்ட ஆப்பிள் ரூ.150 ஆகவும், ரூ.250-க்கு விற்கப்பட்ட மாதுளை ரூ.200 ஆகவும் குறைந்துள்ளது. ரோஜாப்பூ ரூ.100-ல் இருந்து ரூ.50 ஆகவும், சென்ட் பூ ரூ.70-ல் இருந்து ரூ.40 ஆகவும் விலை குறைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com