

ரூ. 100 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் வழங்க கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான பி.டி.அரசகுமார் உள்பட பலருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை அன்பில் மகேஷ் காவல் ஆணையர் அலுவலகம் வரவழைக்கப்பட்டு அங்கு அவரிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், அன்பில் மகேஷ் முதலில் மனு தாக்கல் செய்தார். பின்னர், வழக்கில் முன்ஜாமீன் கோரியும், அன்பில் மகேஷ் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்தார். விசாரணையின் போது அன்பில் மகேஷ் மற்றும் காவல் துறை தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். பிறகு, மருத்துவ பரிசோதனைக்காக அன்பில் மகேஷ் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல். எஸ். சத்யமூர்த்தி முன் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ்-ஐ விசாரணைக்கு எடுக்க அனுமதி கோரி காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. மறுபுறம், அன்பில் மகேஷ்-க்கு ஜாமீன் வழங்கக்கோரி தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். இருதரப்பில் சுமார் 2 மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு 11 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் திட்டமிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஓரிரு நாளில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன்கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு வருகிற வியாழன் கிழமையன்று விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.