

கரைபுரண்டு வந்த வெள்ளநீர், கோயில் அடிவாரப் பகுதிக்குள் புகுந்து, அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தை நாலாபுறமும் முழுமையாகச் சூழ்ந்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைதிருமூர்த்திமலையில் தென்னகத்தின் கயிலாயம் என்று போற்றப்படும் அமணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெருமூர்த்திகளும் ஒரே சுயம்பு வடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலின் அடிவாரத்தில் பாலாறு பாய்ந்தோடுகிறது.
கனமழை
இந்த நிலையில், நேற்று இரவு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக, இரவு 10 மணியளவில் பாலாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கரைபுரண்டு வந்த வெள்ளநீர், கோயில் அடிவாரப் பகுதிக்குள் புகுந்து, அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தை நாலாபுறமும் முழுமையாகச் சூழ்ந்தது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் உடனடியாக எச்சரிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று அதிகாலையில் மலைப்பகுதியில் மழை குறைந்ததைத் தொடர்ந்து, பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வெள்ளநீர் முற்றிலும் வடிந்தது.
இதையடுத்து, கோயில் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தீவிர தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் தேங்கியிருந்த வண்டல் மண், குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
தூய்மைப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கமான பூஜைகளுடன் அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. விடியற்காலை முதலே காத்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேவேளையில், மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து இன்னும் பாதுகாப்பான அளவை எட்டவில்லை.
இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாளாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்குச் செல்லவும், குளிப்பதற்கும் வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.