

கருப்பசாமி கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சாமி தரிசனம் செய்ய வருபவர்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை அடுத்த கான்சாபுரம் அருகேயுள்ள அத்திகோவில் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்ததால் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சமயங்களில் பொதுமக்கள் அந்த பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
இதற்கிடையே அத்திகோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இதனை குலதெய்வமாக கொண்ட ஏராளமான பக்தர்கள் சாதாரண சமயங்களில் வந்து படையிலிட்டு வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். அதேபோல் அங்கு ஏராளமான விவசாய நிலங்களும் உள்ளன.
இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் நடைபெறுவதால் விவசாயிகள் அனைவரும் சேர்ந்து இரும்பு சறுக்கு பாலமாக அமைத்து தண்ணீர் அதிக அளவு வராத காலங்களில் இந்த பாலம் வழியே டிராக்டர், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை மூலம் தங்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
அதோடு கருப்பசாமி கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சாமி தரிசனம் செய்ய வருபவர்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சறுக்கு இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக பெரிய பாலம் அமைக்க கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.2 கோடியே 32 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதால் பாலம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்த தொகையை வைத்து விரைவில் பாலம் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டுமென கான்சாபுரம் விவசாயி ராஜ்குமார் என்பவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த பாலம் அமைந்தால் அதன் வழியாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் சென்று வருவதற்கு வாய்ப்பாக இருக்கும். மழை பெய்யும் காலங்களில் ஆற்றைக் கடந்து சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் அமைத்த தற்காலிக பாலம் பழுதடைந்துள்ளது.
விடுமுறை நாட்களில் கருப்பசாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். நேற்று முன்தினம் கருப்பசாமி கோவிலுக்கு சென்று பகலில் திரும்பிய பக்தர்கள் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்ததை பார்த்ததும் பயந்து போய் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
நேற்று கருப்பசாமி கோவிலுக்கு செல்வதற்காக வாகனத்தை தண்ணீருக்குள் இறக்கியபோது வாகனம் நகர முடியாமல் சிக்கிக் கொண்டது. இதனால் அரை மணி நேரம் போராடி பின்னர் வாகனத்தை மீட்டு அதன் பிறகு வாகனத்தில் பக்தர்கள் ஏறி கருப்பசாமி கோவிலுக்கு சென்றனர்.