அணைப்பிள்ளையார், கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகளுக்கு தடை

கும்பக்கரை, சுருளி அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணைப்பிள்ளையார், கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகளுக்கு தடை
Published on: 
Summary

போடி மீனாட்சியம்மன் கண்மாய், பங்காருசாமி குளம், சங்கரப்பன் கண்மாய் போன்ற நீர்பாசன கண்மாய்களுக்கு ஆதாரமாக விளங்கும் அணைப்பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

வெள்ளப்பெருக்கு

வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கொட்டக்குடி ஆறு, மூலவைகை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து 1216 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 86 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 52.62 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 2355 மி.கன அடி.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்த தொடர் மழை காரணமாக நீர்மட்டம் 122.85 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து 1147 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 1200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது. நீர் இருப்பு 3192 மி.கன அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணை

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 126.28 என முழு கொள்ளளவில் நீடிக்கும் நிலையில் அணைக்கு வரும் 228 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.60 அடியாகவும், சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 29 அடியாகவும் உள்ளது.

தடுப்பணை

போடி மீனாட்சியம்மன் கண்மாய், பங்காருசாமி குளம், சங்கரப்பன் கண்மாய் போன்ற நீர்பாசன கண்மாய்களுக்கு ஆதாரமாக விளங்கும் அணைப்பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணைகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக கரையோரங்களில் 8 அடி உயரத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் ஈரப்பதமாக காணப்படுவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பணை பகுதிகளில் கான்கிரீட் கம்பிகள் ஆபத்தான முறையில் நீட்டிக்கொண்டு உள்ளதால் அங்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என போலீசார் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதேபோல் கும்பக்கரை, சுருளி அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மழை அளவு

போடி 12.6, ஆண்டிபட்டி 4, பெரியகுளம் 3, சோத்துப்பாறை 7, மஞ்சளாறு, உத்தமபாளையம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா 2, தேக்கடி 4, சண்முகாநதி 1.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

X