

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக, முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் மற்றும் முள்ளிமாநகர் மீனவர் பஞ்சாயத்து சபைகள் தலைமையில் மீனவர்கள் குடும்பத்துடன் கடற்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசாணை எண் 564-ஐ ரத்து செய்து, பூர்வீக நிலங்களை பட்டாவுடன் மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பாதுகாப்பு காரணமாக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு, சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை, சமீபத்தில் முதலமைச்சர் விஜய், சட்டசபையில் வெளியிட்டார். இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. கடலோர பகுதியில் இத்திட்டம் வருவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி இன்று மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் மீனவர் பஞ்சாயத்து சபை மற்றும் முள்ளிமாநகர் மீனவர் பஞ்சாயத்து சபை தலைமையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணை எண் 564-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும், முள்ளிக்குப்பம் மற்றும் முள்ளிமாநகர் மீனவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை பட்டாவுடன் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் ஏராளமான மீனவர்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.