

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்பதற்கு தமிழ்நாட்டின் முந்தைய அரசான திமுக திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. காரணம் மும்மொழி கொள்கை என்பது இந்தியை மறைமுகமாக திணிப்பது என திமுக வாதாடி வருகிறது.
ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது அமைந்துள்ள தவெக அரசின் நிலைப்பாடு என்னவென்பது பலரின் கேள்வியாக நீண்ட நாட்களாக இருந்துவருகிறது.
இதனிடையே தவெக அரசும் தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையையே தீவிரமாகப் பின்பற்றும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெளிவுப்படுத்தியிருந்தார்.
இருப்பினும் மும்மொழிக் கொள்கை தொடர்பான தீவிர எதிர்ப்பு என்பது தவெக தரப்பில் இருந்து வரவில்லை.
இந்நிலையில் திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வழங்கப்படும் மருந்துப்பையில் இந்தி எழுத்துகள் இருப்பது தொடர்பான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இந்த மருத்துவ காகிதப் பைகளில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக் காட்டி இப்படங்களை பகிர்ந்துள்ள அவர்.,
“தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல !
முதலில் கரூர்...இப்போது கோவையிலும் அதே நிலமை... என இந்தி திணிப்பு எனும் ஹேஸ்டேக்கை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.