

அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ரசாயன நிறுவனத்தின் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1-வது குறுக்கு தெருவில் ரீச்சம் லேபரெட்டரி கெமிக்கல் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் குடோனில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அறிவியல் ஆய்வகங்களுக்கு தேவையான பல்வேறு வகையான ரசாயனப் பொருட்கள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 9.50 மணியளவில் குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்பத்தூர் எஸ்டேட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் 9 தீயணைப்பு வீரர்கள், நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குறுகலான பகுதி மற்றும் காற்றின் வேகத்தால் தீ கொளுந்து விட்டு எறிய தொடங்கியது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்பு புகை சூழ்ந்து பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 5,000 கிலோ பஞ்சு பெட்டிகள், 20 வகையான ரசாயன கரைப்பான்கள் 2 டன் மற்றும் 100 கிலோ உப்பு உள்ளிட்ட பொருட்கள் தீயில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.