

ஏற்கனவே சிறுமிகள் பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி மீது, அண்மையில் குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ச்சப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கைக் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு முன்பு, தான் சிறுமியாக இருந்தபோது ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இவர் மீது அடுத்தடுத்து போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் கைதான நிலையில், தற்போது 5-வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் புகார் மனு ஒன்றை அனுப்பினார். அதில், 7 வருடங்களுக்கு முன்பாகத் தான் சிறுமியாக இருந்த காலகட்டத்தில், ஜெம் வீரமணி தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த அதிகாரிகள், உடனடியாக அவர் மீது புதிய வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே சிறுமிகள் பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி மீது, அண்மையில் குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ச்சப்பட்டுள்ளது. அவருடன் இணைந்து குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் உள்ளிட்ட நபர்களும் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய அரசு பெண் காவல் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், ஜெம் வீரமணி தொடர்பான அனைத்து வழக்குகளிலும் தீவிர ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். வழக்கு விசாரணையை மூடிமறைக்க நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பென்டிரைவ் ஆதாரங்கள் குறித்தும் அதிகாரிகள் முழுவீச்சில் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.